மனிதன் திரை விமர்சனம்

0
265
ரொமாண்டிக் காமெடிப் படங்களில் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின், சில மாதங்களுக்கு முன் வெளியான ‘கெத்து’ படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்திருந்தார். இன்று வெளியாகியிருக்கும் ‘மனிதன்’ படத்தில் எமோஷனல் நடிப்பைத் தொட்டிருக்கிறார் என்பது, ட்ரைலரிலியே தெரிந்தது.
இந்தியில் வெற்றிபெற்று சில தேசிய விருதுகளையும் வென்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தை ‘என்றென்றும் புன்னகை’ புகழ் அஹமத் இயக்கியிருக்கிறார். தொடர்ந்து தரமான படங்களை வழங்கிவரும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் படத்தின் வெளியீட்டில் பங்கெடுத்திருக்கிறது. இவற்றால் ஏற்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குக்குள் நுழைபவர்கள் திருப்தியடைவார்களா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
பொள்ளாச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கும் வக்கீல்தான் நாயகன் சக்தி (உதயநிதி ஸ்டாலின்). முறைப்பெண் மற்றும் காதலி ப்ரியாவை (ஹன்சிகா) இழந்துவிடாமல் இருக்க அவர் வக்கீல் தொழிலில் சாதித்துக் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்படவே, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வருகிறார். ஆனால் சென்னையில் வழக்கு கிடைப்பதும் அதைவைத்து வாழ்க்கை நடத்துவதும் சாத்தியமில்லை என்று முடிவெடுத்து ஊருக்குக் கிளம்பும் வேளையில், முடிந்துபோன ஒரு வழக்கைக் கையில் எடுப்பதற்கான பொறி கிடைக்கிறது.
காரை ஏற்றி நடைபாதிவசிகளைக் கொன்ற வழக்கில், நாட்டின் தலைசிறந்த வக்கீல் ஆதிசேஷன் (பிரகாஷ் ராஜ்) தன் வாதத் திறமையால் குற்றவாளியான பணக்கார வாலிபரைக் காப்பாற்றிவிடுகிறார்.  அந்த வழக்கில், பிறழ் சாட்சியங்களால் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதை செய்தித் தாள்கள் மூலம் தெரிந்துகொள்ளும் சக்தி, அத்தீர்ப்பை எதிர்த்து பொதுநல வழக்கு போடுகிறார்.
அதன் பின், ஆதிசேஷனின் வாதத் திறமையையும் நீதிமன்றத்துக்கு வெளியே அவரது செல்வாக்கால் ஏற்படும் பல்வேறு வகையான சிக்கலகளையும் சமாளித்து வழக்கில் வெற்றியடைகிறாரா என்பதே மீதிக் கதை.
முதலில் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முதல் முறையாக பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நீதிமன்றத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றுகூடத் தெரியாத அறியாமை. மற்றவர் ஏளனத்தைக்கூட புரிந்துகொள்ளத் தெரியாத அப்பாவித்தனம், நாயகியுடன் காதல். நீதிமன்றங்களில் கிடைகும் ஏமாற்றங்களால் ஏற்படும் பரிதவிப்பு, வக்கீல் தொழிலில் சாதிக்க முடியவில்லையே என்ற ஏக்கம், வழக்கை கையிலெடுத்ததும் ஏற்படும் பெருமிதம், வழக்கின் உண்மையான பிரச்சனையை உணர்ந்தவுடன் அதனனுடன் உணர்வுப்பூர்வமாக ஒன்றுவது, இறுதியில் நடைபாதைவாசிகளின், வாழ வழியற்றவர்களின் சோகங்களை அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சோகத்துடன் வெளிப்படுத்தி நெகிழ வைப்பது என அனைத்து ஏரியாக்களிலும் அசத்தியிருக்கிறார். அந்த வகையில் உதயநிதி என்ற நடிகருக்கு இது மிக முக்கியமான படம்தான்.
ராதாரவி மிகச் சிறப்பாக நடித்த மற்றுமொரு படம் இது. முதலில் அசிரத்தையாகவும் நீதிமன்ற நடைமுறைகளால் அலுப்படைந்தவராகவும் வெளிப்படும் அவர் வழக்கு சூடுபிடிக்கத் தொடங்கியவுடன் விழிப்படைவதும், நீதிபதி என்ற தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதும் கைதட்டல்களை அள்ளுகின்றன.
பிரகாஷ் ராஜ் வழக்கம்போல் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். நீதிமன்றக் காட்சிகளில் நீண்ட வசனங்களை பல்வேறு உணர்ச்சிபாவங்களுடன் அநாயசமாகப் பேசுகிறார். ஆனால் இதுபோன்ற நடிப்பை அவரிடம் பலமுறை பார்த்துவிட்டோம். நாட்டின மிகப் பிரபலமான வக்கீலின் தோரணையைக் கண்முன் நிறுத்துவது மட்டும்தான் இதில் புதுமை.
 இறுதிக் காட்சியில் சாட்சி சொல்பவரின் நடிப்பு மனதைத் தைக்கிறது.
ஹன்சிகாவை பொள்ளாச்சி பெண்ணாக ஏற்கவே முடியவில்லை. அவரது முகபாவங்கள் செயற்கைத்தனமாகவும் வசன உச்சரிப்பு அந்நியமாகவும் இருக்கின்றன. ஐஸ்வர்யா ராஜேஷ் வலுவான பத்திரிகை நிருபர் பாத்திரத்தை சரியாகப்
பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். நாயகனின் மாமாவாகவும் சக வக்கீலாகவும் வரும் விவேக்கின் கதையோடு சேர்ந்த நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.
ஒரு நீதிமன்ற வழக்கைச் சுற்றி நடக்கும் கதை, நீண்ட கோர்ட் காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சில தமிழ்ப் படங்களின் பட்டியலில் இணையும் இந்தப் படம், நீதிமன்றங்களின் நிகழ்வுகளையும் அங்கு நடப்பவற்றையும் மற்ற படங்களைவிட சற்று விரிவாகவே பதிவு செய்திருக்கிறது. அதோடு வழக்கறிஞர்களின் வாழ்க்கைச் சூழலையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கிறது.
நடைபாதைவாசிகளின் வாழ்நிலை, பணபலமும் அதிகார பலமும் சேர்ந்து அவர்களுக்கு அநீதி இழைப்பது, ஆதாரம் இல்லை என்ற ஒரே காரணத்தால் நீதிமன்றத்திலும் ஏழைகளுக்கு நீதி மறுக்கப்படும் சூழல் ஆகிய சமூக அக்கறை சார்ந்த விஷயங்கள் படத்தில் மிகச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் பதிவாகியுள்ளன. இதற்கு அஜயன் பாலாவின் வசனங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. குறிப்பாக கடைசி 20 நிமிட நீதிமன்ற விவாதக் காட்சிகளில் வசனங்கள் நுட்பமாகவும் மனதைத் தொடுபவையாகவும் அமைந்திருக்கின்றன.
படத்தில் பல நல்ல காட்சிகள் இருக்கின்றன. அசிஸ்டண்ட் கமிஷனர் வேலைக்கு ஏலம் விடும் காட்சி, பேசியதைவிட குறைவான சம்பளம் தந்து ஏமாற்றும் பணக்கார க்ளையண்டிடமிருந்து பணம் பறிக்க, ஆதிசேஷன் செய்யும் தந்திரம், கடைசியில் வழக்கில் நிகழும் முக்கியத் திருப்பம் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
ஆனால் பெரும்பாலான காட்சிகள் ஊகித்த படியே நகர்கின்றன.
படத்தின் தொடக்கக் காட்சியில் நடைபாதைவாசிகள் கொல்லப்படுவதை க் காட்டிவிட்டு நாயகனை வக்கீலாகக் காட்டியவுடன் தெரிந்துவிடுகிறது- நடைபாதை விபத்து வழக்கை நாயகன் கையிலெடுக்கப் போகிறார் என்று. ஆனால் திரைக்கதையில் அது கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்குப் பிறகுதான் நிகழ்கிறது. அதற்கு முன் நாயகன், நாயகி மற்றும் இதர காதாபாத்திரங்களை அவற்றின் பின்னணியுடன் அறிமுகப்படுத்தும் காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. இரண்டாம் பாதியில் நிகழ்பவையும் ஒரளவு ஊகிக்க்கூடையவையாகவே இருக்கின்றன.
நாயகன்-நாயகி காதல் சார்ந்த காட்சிகள் அளவுக்கதிகமாக திணிக்கப்பட்டு அலுப்பூட்டுகின்ற்ன. இந்தக் காட்சிகளில் ஒன்றில்கூட புதுமையோ சுவாரஸ்யமோ இல்லை.
சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையில் வழக்கம்போல் இயக்குனருக்கு பக்கபலமாக இருக்கிறார். மதியின் ஒளிப்பதிவில் லைட்டிங்கும் காட்சிக் கோணங்களும் சிறப்பாக இருக்கின்றன. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு படத்தின் நீளத்தைக் குறைக்க உதவியிருக்கலாம்.
படத்தில் பல நிறைகள் இருந்தும் ஒரு கோர்வையான திரைப்பட அனுபமாக இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அப்படி அமைவதற்கான சாத்தியம் இருந்தும் அது சரியாகப் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கத்தால்தான் இதை சொல்ல வேண்டியிருக்கிறது.
இருந்தாலும் நல்ல நடிப்பு, நல்ல வசனங்கள், நல்ல காட்சிகள், படத்தில் வெளிப்படும் சமூக அக்கறை ஆகியவற்றுக்காக ’மனிதன்’ படத்தை நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்.

NO COMMENTS

LEAVE A REPLY