சேதுபதி – திரை விமர்சனம்

0
399

‘நானும் ரவுடி தான்’ படத்தில் ரவுடியாக ஆசைப்பட்டு மீசையே இல்லாமல் கெத்து காட்டிய விஜய் சேதுபதி இதில் போலீஸ் அதிகாரியாக மீசையை முறுக்கிக் கொண்டு கெத்து காட்டியிருக்கிறார்.

மதுரையில் உள்ள ஒரு ஏரியாவில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருக்கும் விஜய் சேதுபதிக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் புரமோஷன் தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் அவர் எல்லைக்குட்பட்ட ஏரியாவில் சக போலீஸ் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று எரித்து கொன்று விடுகிறது.

அதன் பின்னணியை விசாரிக்கப் போகும் விஜய் சேதுபதி அந்த ஊரில் ‘வாத்தியார்’ ஆக வலம் வரும் வேல ராமமூர்த்தி இருப்பது தெரிய வருகிறது.

அவரை நெருங்க நெருங்க, விஜய் சேதுபதிக்கும் ‘வாத்தியார்’ தரப்பிலிருந்து நெருக்கடிகள் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அந்த நெருக்கடிகளை சமாளித்து எப்படி ஜெயிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

இந்த காலத்தில் இப்படி ஒரு நேர்மையான அதிகாரி. அதிலும் காவல் துறையில் என்கிற சந்தேகம் படம் பார்க்க வருகிற அத்தனை ரசிகர்களுக்கும் வந்து விடுகிறது. அந்தளவுக்கு நேர்மையின் சிகரமாக வருகிறார் விஜய் சேதுபதி.

எந்தப் படமாக இருந்தாலும் துளியளவு கூட யதார்த்தம் மீறாத நடிப்பைத் தரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் அடுத்த லெவலான ஒரு மாஸ் ஹீரோவுக்கான லுக்கில் வருகிறார். அந்த கேரக்டரிலும் கூட யதார்த்தம் மீறாமல் நடித்திருப்பது சபாஷ்! அதே சமயம் முந்தைய படங்களில் விஜய் சேதுபதியை இதுபோன்ற சீரியஸ் கேரக்டரில் ரசிகர்கள் பார்த்து பழக்கப்படாதவர்கள்

என்பதால் இதில் போலீசுக்கே உரிய கம்பீரத்தை காட்டும் போதெல்லாம் ஏனோ மனசுக்குள் ஒட்டாமல் போகிறது.

மீசையை முறுக்கிக் கொண்டு போலீஸ் உடையில் வந்தாலும் மற்ற மாஸ் ஹீரோக்கள் லெவலுக்கு பில்டப் காட்சிகளை வைக்காமல் அடக்கியே வாசித்திருப்பது அருமை. நாயகியாக வரும் ரம்யா நம்பீஸன் விஜய் சேதுபதிக்கு ‘மேட் பார் இச் அதர்’ என்று சொல்லுகிற அளவுக்கு அப்படி ஒரு ஜோடிப்பொருத்தம். விஜய் சேதுபதியுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் கூட உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.

குழந்தைகள் முன்னால் பெற்றோர்கள் சண்டைபோடக்கூடாது என்பதை காட்டிய இயக்குநர் அதே குழந்தைகள் முன்னால் கணவன் – மனைவியை ரொமான்ஸ் செய்ய விட்டிருப்பது எந்த மாதிரியான ஒழுக்கம் என்று தெரியவில்லை.

நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசையில் ஒவ்வொரு காட்சியிலும் ஆக்‌ஷன் பொறி பறக்கிறது! அதிலும் அந்த ‘நான் ராஜா’ பாடலில் அப்படி ஒரு ஈர்ப்பு

போலீஸ் படமென்றாலே ஆக்‌ஷன் படமாகத்தான் இருக்க வேண்டும் என்கிற ரெகுலர் சினிமா தியரியை கொஞ்சம் மாற்றி அவர்களுடைய குடும்பம், பாசம் என எக்ஸ்ட்ரா சில விஷயங்களையும் சேர்த்திருக்கிறார்கள்.

அரசாங்க துறைகளிலேயே லஞ்சம் வாங்குவதில் முதலிடத்தில் இருக்கிறது காவல்துறை தான் என சொல்கிறது அவ்வப்போது வருகின்ற கருத்து கணிப்புகள். ஒரு சிறிய கொலையில் கூட துப்பறியும் திறன் இல்லாமல் இருக்கிறது காவல்துறை என்று குற்றம் சாட்டுகிறது நீதித்துறை. காவல்துறையின் சமீபகால நிஜமுகம் இப்படியிருக்கையில் படத்தின் இயக்குநரோ காவல்துறையை உயர்வாக காட்ட எண்ணி அந்த யதார்த்தத்ங்களை முற்றிலுமாக மறந்திருக்கிறார். அல்லது அந்த ஏரியாவை தொடாமல் விட்டிருக்கிறார் என்பது மட்டுமே திரைக்கதையின் பலவீனம்.

மற்றபடி வழக்கமான போலீஸ் கதையில் விஜய் சேதுபதிக்கு மட்டும் காக்கி ட்ரெஸ்சை மாட்டிவிட்டு புதுசாக காட்டியிருக்கிறார் இயக்குநர் அருண்குமார்.

SETHUPATHI CAST & CREW:

Cast: Remya Nambeesan, Vijay Sethupathi Direction: SU Arun Kumar, Production: Vansan Movies – Shan Sutharsan, Screenplay: SU Arun Kumar Story:SU Arun Kumar Music: Nivas K Prasanna Background score: Nivas K Prasanna Cinematography: Dinesh Krishnan, Dialogues: SU Arun Kumar Editing: A Sreekar Prasad Art direction: CS Balachander Stunt choreography: Rajasekar Lyrics: Na Muthukumar PRO:Nikkil Murugan

NO COMMENTS

LEAVE A REPLY